ராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி

இந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை சென்றார்.

1884ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் நாள் பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்திற்குட்பட்ட சீரடை என்ற இடத்தில் பிறந்தார். பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ‘மஹாதேவ் சஹாய்’ சமஸ்கிருதம் மற்றும் பெர்சிய மொழிகளை கற்றுக்கொடுக்கும் பணியினை செய்து வந்தார். தாய் ‘கமலேஸ்வரி தேவி’ இந்து மதத்தில் ஆர்வமுடையவர். ராஜேந்திர பிரசாத்தின் சிறுவயதில் அவருக்கு ராமாயணத்தின் கதைகளை எடுத்துக்கூறுவார்.

தனது 5ம் வயதில் கல்வி கற்க துவங்கிய பிரசாத் முதலில் கணிதம், பெர்சியன், ஹிந்தி ஆகியவற்றை கற்று தேர்ந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் உள்ள ‘ப்ரெசிடெண்சி கல்லூரி’யில் அறிவியல் கற்றார்.

இவரது பெற்றோர்கள் இவருக்கு 12ம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். ராஜவன்ஷி தேவி என்ற பெண்ணை மணந்தார்.

தனது கல்விக்கு பின்னர் பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக பணி புரிந்தார். அதன் பின்னர் பீகார் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சிறிது காலம் பணியாற்றினார்.

பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து சசுதந்திர போராட்டங்களில் பங்கேற்க துவங்கினார்.

1931ம் ஆண்டு நடை பெற்ற ‘உப்பு சத்தியாகிரக போராட்டம்’ மற்றும் 1942ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டங்களில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதனால் பல முறை ஆங்கிலேய அரசால் சிறைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக உருவெடுத்தார். 1934 – 1935 ம் ஆண்டுகளில் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் இந்திய விடுதலை பெற்ற 1947ம் ஆண்டு ‘இந்திய அரசியலமைப்பு குழுவின்’ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக உருவெடுத்தபோது இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 26 ஜனவரி 1950 முதல் 13 மே 1962 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

28 பெப்ரவரி 1963 அன்று மரணமடைந்தார்.

Share This: